தமிழகம் முழுவதும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூளைமேடு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதி ஒன்றில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு அறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 1.3 கிலோ இருந்தது. இது தொடர்பாக அந்த அறையில் தங்கியிருந்த  பெண்ணிடம் போலீசார்  விசாரணை‌ நடத்தினர். அப்போது அவருடைய பெயர் ஷர்மிளா என்பதும், ஒரு ஐடி நிறுவனத்தில் அவர் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இவர் தன்னுடைய நண்பர் சுரேஷ் என்பவர் கஞ்சாவை கொடுத்ததாக கூறியுள்ளார். இவர் கால் டாக்ஸி ஓட்டுனர் ஆவார். இதைத் தொடர்ந்து சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் வெளி மாநிலங்களில் இருந்து வரும் கஞ்சாவை சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கும் வேலையை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் ஷர்மிளா மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.