திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதசார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பொது விளக்ககூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்து மதத்தை எதிர்ப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் கிடையாது. அதே நேரத்தில் சனாதன தர்மத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
மத்திய பாஜக அரசு நாட்டை ஆள்வதற்கு மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்த நிலையில் ராகுல் காந்தி மதசார்பின்மையை கருத்தில் கொண்டு அதிலிருந்து பின்வாங்காமல் இருக்கிறார். இதன் காரணமாகத்தான் எங்களுக்கும் ராகுல் காந்திக்கும் ஒத்துப் போவதுடன் அந்த கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம்.
மதசார்பின்மையை கடைபிடிக்கும் அரசுடன் தான் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி கைகோர்த்துள்ளது. நானும் ரவுடிதான் என்பது போல் தமிழ்நாட்டில் தற்போது புதிதாக உருவானவர்கள் எல்லோரும் நாங்கள்தான் முதல்வர் என்று சொல்கிறார்கள். இதில் 35 வருஷ கால பொது வாழ்க்கைக்காக என்னை அர்ப்பணித்த எனக்கு முதலமைச்சர் ஆக தகுதி இல்லையா.? இவ்வாறு கூட கூறி என்னை சிலர் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
ஆனால் கொள்கை அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருக்கிறது என்றார். மேலும் நடிகர் விஜய் தற்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவர்தான் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று அவர்கள் அறிவித்துள்ளதால் திருமாவளவன் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் என்று அவரைத்தான் மறைமுகமாக கூறியதாக கூறப்படுகிறது.
