திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில், திமுக நிர்வாகி ஒருவரை அக்கட்சியின் எம்.எல்.ஏ-வே பொதுவெளியில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே ‘திராவிட பொங்கல்’ விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் டிரால்பாடி ஊராட்சியில் திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் கட்சியின் ஒன்றிய அவைத் தலைவர் முனிவேல் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உடன் சென்றனர்.

எம்.எல்.ஏ கோவிந்தராஜனும், முனிவேலும் பேசிக்கொண்டே சாலையோர ஊர்வலமாகச் சென்றபோது, திடீரென ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ, அனைவர் முன்னிலையிலும் முனிவேலின் கன்னத்தில் பளார் என அறைந்தார். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சற்று நிதானிப்பதற்குள், எம்.எல்.ஏ மீண்டும் முனிவேலைத் தாக்க முயன்றார். உடனே அருகில் இருந்த மற்ற நிர்வாகிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கூறப்படுவதாவது:

கட்சியின் உட்கட்சி பூசல் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பொதுமக்கள் முன்னிலையிலேயே ஒரு மக்கள் பிரதிநிதி, தன் கட்சி நிர்வாகியைத் தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தற்போது இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. “பொதுவெளியில் கண்ணியம் காக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினரே இவ்வாறு நடந்துகொள்வது முறையா?” எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.