தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மீஞ்சூரில் கல்லூரி மாணவி ஒருவரை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தமிழகம் வாழ வேண்டுமென்றால், திமுக வீழ்ந்தே ஆக வேண்டும்” எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் மிக ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

​கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதால் இதுபோன்ற கொடூரக் குற்றங்கள் பெருகி வருவதாகக் குறிப்பிட்ட இபிஎஸ், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இந்த விடியா அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அவர் எச்சரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.