சென்னை அபிராமபுரம் பகுதியில் சளித்தொல்லைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை கலந்து மூக்கில் தடவிய 8 மாத குழந்தை, மூச்சுத் திணறலால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்திய நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த  தேவநாதன் என்பவருக்கு 8 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களாக குழந்தைக்கு சளி பிரச்சனை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜூலை 13 ஆம் தேதி மாலை குழந்தையின் சளி குறைய வேண்டும் என்ற நோக்கத்தில், தேவநாதனும் அவரது குடும்பத்தினரும், விக்ஸ் மற்றும் கற்பூரம் இரண்டையும்  கலந்து  குழந்தையின் மூக்கில் தடவியுள்ளனர். இதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்குள் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. உடனடியாக குழந்தையை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், குழந்தை இன்று (ஜூலை 16) அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை சளி காரணமாகவே உயிரிழந்ததா, அல்லது கற்பூரம் கலந்த விக்ஸை மூக்கில் தடவியதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு  இறந்தது.

இதற்கான உறுதியான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னர் வெளியாகும் என மருத்துவர்  மற்றும் போலீஸ் தரப்புகள்  தெரிவித்த நிலையில்  அது குறித்த  உண்மை தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி , குழந்தைக்கு ஏற்கெனவே சிறுநீரகம் மற்றும்  கல்லீரல் பாதிப்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை பிறக்கும் போதே இந்த பிரச்சனை இருந்ததாகவும் , அதனால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற வீட்டு வைத்திய முறைகளை   குழந்தைகளுக்கு பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும் என்ற எச்சரிக்கையும் மருத்துவர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.