திருவள்ளூர் மாவட்டம் கும்பிண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) அன்று நடந்த கொடூர சம்பவம், தமிழகமெங்கும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி முடிந்து தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் வாயை மூடி அவளைக் கடத்தி, அருகிலுள்ள மாந்தோப்பில் சிறுமியின் மீது பாலியல் வன்கொடுமை செய்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் கடும் அதிர்வுடன் நடவடிக்கைக்கு இறங்கினர். ஆரம்ப நிலையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திய நிலையில், தற்போது மேலும் மூன்று தனிப்படைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஐந்து விசாரணைப் படைகள் இணைந்து தற்போது வழக்கை பல கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றன. இதில் முக்கியமான சந்தேகத்திற்குரிய 10 நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி தற்போது மருத்துவ கவனிப்பில் நலமாக இருப்பதாகவும், அவளது உடல்நலத்தையும் மனநிலையையும் கருத்தில் கொண்டு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தில் பெரும் கவலையை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை விரைவில் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
