மதுரையில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால்தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் பேசியதற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு மாநிலத்தின் முதல்வர், மற்றொரு மாநிலத்திற்கு வந்து மக்களை மிரட்டும் தொணியில் “பிளாக்மெயில்” செய்வது முறையற்ற செயல் என்று அவர் விமர்சித்துள்ளார்.

இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதற்கு மகாராஷ்டிர முதல்வர் வெட்கப்பட வேண்டும் என்றும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இத்தகைய பேச்சுகள் அமைந்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மத்திய அரசின் நிதிப் புறக்கணிப்புகளையும் மீறி, தமிழ்நாடு அரசு பல்வேறு சாதனைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை முதல்வர் ஸ்டாலின் இந்தப் பதிவில் நினைவுபடுத்தியுள்ளார். “டபுள் இன்ஜின்” என்று பாஜகவினர் பெருமை பேசும் மாநிலங்களை விட, திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டி சாதனை படைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டு மகாராஷ்டிர முதல்வர் பேச வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.