தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்வுகளிலும் தனது பெயரை ‘ஜோசப் விஜய்’ என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிட்டு வருகிறார். இந்தச் சூழலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், முதலமைச்சர் விஜய்யின் பெயரை மையமாக வைத்து விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

“படத்தில் நடித்தபோதெல்லாம் ஏன் ஜோசப் விஜய் என்று போடாமல் வெறும் விஜய் என்று மட்டும் வைத்திருந்தீர்கள்? முதலமைச்சரான பிறகுதான் ஜோசப் விஜய் என்று நினைவுக்கு வந்ததா? முதல் படத்திலிருந்தே ஜோசப் விஜய் என்று போட்டிருக்கலாமே?” எனச் சீமான் கேள்வி எழுப்பியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

​சீமானின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் ஆதாரப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். சீமான் எதையெல்லாம் சுட்டிக்காட்டி விமர்சித்தாரோ, அதே பாணியில் அவருக்கே திருப்பி அடிக்கும் விதமாக அந்தப் பதிவு அமைக்கப்பட்டுள்ளது.

​அந்த வைரல் எக்ஸ் பதிவில், சீமான் அவர்களின் தந்தையின் உண்மையான பெயர் ‘செபாஸ்டியன்’ என்றும், அதை மறைத்துத்தான் தற்போது ‘செந்தமிழன்’ என்று கூறி வருகிறார் என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்குச் சான்றாக, கடந்த 2009-ஆம் ஆண்டு சீமான் அவர்கள் கனடா நாட்டிற்குச் சென்றபோது பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வப் பயண ஆவணத்தை (Document) நெட்டிசன்கள் ஆதாரமாக இணைத்துள்ளனர். அதில் அவரது பெயர் ‘செபாஸ்டியன் சீமான்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

​”மக்களுக்குச் சேவை செய்ய வந்த முதலமைச்சரின் மத அடையாளத்தையும் பெயரையும் பிடித்துக்கொண்டு அரசியல் செய்வதற்குப் பதிலாக, சொந்தப் பின்னணியை மறைக்காமல் இருக்கிறீர்களா எனப் பாருங்கள்” என்று நெட்டிசன்கள் சீமானை நோக்கிக் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த எக்ஸ் பதிவு தற்போது இணையத்தில் அனலாய் பரவி வருவதோடு, அரசியல் வட்டாரத்திலும் பெரும் காரசாரமான விவாதங்களைத் தூண்டியுள்ளது.