தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தர்மசங்கடமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனனின் வேட்புமனு தற்போது அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனையின் போது, அவரது மனுவில் சில தொழில்நுட்பக் குளறுபடிகள் மற்றும் போதிய விவரங்கள் இல்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ஏற்கனவே கோபிசெட்டிபாளையம் தொகுதி தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் மனு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனாவின் மனுவும் சிக்கலில் இருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உரிய விளக்கம் அளிக்க அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதால், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக-வின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.