சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கில் 9 காவலர்களுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 2020-ஆம் ஆண்டு நடந்த இந்த கொடூர சம்பவத்தின் போது, காவல்துறையினரைக் காப்பாற்றும் நோக்கில் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்தனர் என எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் உண்மைக்கு மாறாகக் கூறியதை செல்வப்பெருந்தகை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த படுகொலையை மூடிமறைக்க மனிதாபிமானமற்ற முறையில் பல்வேறு உத்திகளை கையாண்டதன் மூலம் அவர் வகித்த முதலமைச்சர் பதவிக்கே இழிவு ஏற்படுத்திவிட்டதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள செல்வப்பெருந்தகை, தந்தை முன் மகனையும் மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து கொன்றது ‘அரிதிலும் அரிதான’ குற்றம் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இத்தகைய கொடூர குற்றத்தைச் செய்தவர்களுக்குத் துணை நின்ற எடப்பாடி பழனிசாமி தற்போது சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவது ‘சாத்தான் வேதம் ஓதுவது’ போல் உள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்கத் தவறினால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
