தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பிளஸ்-1 மாணவியையும் அவரது தாயாரையும் அரிவாளால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ஞானமலர் மற்றும் அவரது மகள் மரிய ஜெபராணி ஆகியோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லிங்கதுரை என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பேருந்துக்காகக் காத்திருந்த ஞானமலர், தனது மகளுடன் ஏன் அடிக்கடி தகராறு செய்கிறீர்கள் என்று லிங்கதுரையிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த லிங்கதுரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாய் மற்றும் மகள் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த லிங்கதுரையைத் தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று அவர் கைது செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.