தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை தெளிவாக பிழையின்றி பெரும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை பெற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான முதல் பருவத்திற்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி தொடங்க உள்ளது. அதில் முதல் கட்டமாக தமிழ்,ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் பயிற்சி நடத்தப்படும். பிறகு ஏப்ரல் 10 முதல் 12ஆம் தேதி வரை மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி நடைபெறும் எனவும் ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஏப்ரல் 24 முதல் 26 ஆம் தேதி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.