ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணியில் டி காக் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர்  தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டீ காக் மூன்றாவது பந்தில் ஸ்டம்பை பறி கொடுத்தார். இதற்கு அடுத்த ஓவரில் ஸ்டோய்னிஸ் டக் அவுட்டில் வெளியேறினார். இதனால் 2 ஓவரில் 11 ரன்கள் எடுப்பதற்கு முன்பாகவே லக்னோ இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

இதைத்தொடர்ந்து கேஎல் ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் அரை சதம் எடுத்த நிலையில், தீபக் ஹூடா ஆட்டமிழக்க அடுத்ததாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். இவர் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல் ராகுல் 76 ரன்களில் ஆட்டம் இழந்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில் ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும், பட்லர் 34 ரன்னிலும் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரியான் பார்க் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய சாம்சன்- ஜுரல் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் அரை சதம் எடுத்து அசத்திய நிலையில், ராஜஸ்தான்  இறுதியில் 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இதன் மூலம் லக்னோவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 8 வெற்றி ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் இதன் மூலம் ராஜஸ்தான் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.