தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வின் மொழிப்பாட தேர்வு மற்றும் முக்கிய பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்போது பேசிய பள்ளித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வு ஏன் இத்தனை மாணவர்கள் எழுதாமல் உள்ளனர் என தமிழக முதல்வர் தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். வரும் காலத்தில் இதுபோன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதாத நிலை ஏற்படக்கூடாது.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் இந்த மாணவர்களில் வேலைக்குச் செல்லும் மாணவர்களை கண்டறிந்து துணைத்தேர்வு எழுத வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பொது தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை சேகரிப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.