தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. அரசுக்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்கவில்லை என்பதைப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் சுமார் 3 கோடி மக்கள் த.வெ.க.விற்கு எதிராக வாக்களித்துள்ளனர். கிட்டத்தட்ட 65 சதவீத மக்கள் உங்கள் ஆட்சியை நிராகரித்துள்ளனர். வெறும் 1.72 கோடி வாக்காளர்களின் ஆதரவை வைத்துக்கொண்டு, பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களித்தது போலப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முதல்வர் விஜய்யின் தேர்தல் வியூகத்தைக் விமர்சித்த உதயநிதி, “தனது வெற்றியின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லாத காரணத்தால் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்” எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், 118 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையில், த.வெ.க.வின் பலம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதோடு திமுக கூட்டணி கட்சிகள் வெளியே இருந்து உங்களுக்கு ஆதரவு தந்ததால் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.

தமிழக அரசின் செயல்பாடுகளை சினிமா பாணியில் விமர்சித்த உதயநிதி, புதிய ஆட்சி என்று கூறினீர்கள், ஆனால் இங்கு ‘புஷ்பா’ பட பாணியில் தான் ஆட்சி நடக்கிறது. முதல்வர் ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்திப்பதற்கு முன்பு ஒரு சோபா செல்கிறது, அதற்குப் பின்னால் முதல்வர் செல்கிறார்” என எள்ளி நகையாடினார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த தற்காலிக ஆதரவை வழங்குவதாகத் தெளிவுபடுத்தினார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டாகப் பிளவுபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, கொள்கை எதிரி என்று சொன்னவர்களின் ஆதரவைப் பெற கட்சித் தலைவருக்கே தெரியாமல் காய் நகர்த்தியிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். இறுதியில், த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக அறிவித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர். சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.