தமிழகத்தில் தனியார் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக மின் மீட்டர் வாங்கிக் கொள்ள தற்போது மின்சார வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுவாக தமிழகத்தில் புதிதாக மின் மீட்டர்களை மின்சார வாரியமே நேரடியாக பொருத்துகிறது. இதற்காக அவர்களிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மின் மீட்டர்கள் வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். மின் இணைப்பு வழங்க தாமதம் ஏற்படுவதால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதோடு மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

இதனால் புதிய மின் இணைப்பு வழங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதோடு புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு முனை மற்றும் மும்முனை மீட்டர்களை தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து மின்மீட்டர் வாங்கிக் கொள்ளலாம் என்ற விவரம்  மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.