மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரம் முழுவதும் திடீரென ஒட்டப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட அரசியல் வாழ்த்து போஸ்டர் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவியும், கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி, சீர்காழி நகரத்தின் முக்கிய வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் முழுவதும் இந்த போஸ்டர்கள் வரிசையாக ஆக்கிரமித்துள்ளன.

இதுவரை எந்தவொரு அரசியல் பின்புலமும் நேரடியாகக் காட்டிக்கொள்ளாத ஒருவரை, “வறுமையை ஒழிக்க வந்த தாயே! புதிய விடிவெள்ளியே! தமிழகத்தின் எதிர்காலமே! எங்கள் அம்மா!” என்றெல்லாம் அனல் பறக்கும் கவிதை வரிகளுடன் வாழ்த்தி போஸ்டர் அடித்திருப்பது உள்ளூர் அரசியல் புள்ளிகளைத் தலைசுற்ற வைத்துள்ளது.

வழக்கமாகத் தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கப் பெண் தலைவர்களை மட்டுமே தொண்டர்கள் ‘அம்மா’ என்று அழைத்து போஸ்டர் அடிக்கும் நிலையில், லீமா ரோஸை இப்படி முன்னிறுத்தியிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மெகா போஸ்டரின் பின்னணியில் எந்தவொரு பெரிய கட்சியோ அல்லது நற்பணி மன்றமோ இல்லாமல், சீர்காழியைச் சேர்ந்த ‘வெள்ளியங்கிரி புருஷோத்தமன்’ என்ற தனிநபர் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

லீமா ரோஸ் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் களத்தில் தீவிரமாகத் தடம் பதிக்கத் திட்டமிட்டுள்ளாரா, அதன் முன்னோட்டம்தான் இந்த போஸ்டரா எனச் சீர்காழி டீக்கடைகள் முதல் அரசியல் கட்சி அலுவலகங்கள் வரை ‘ஹாட் டாபிக்காக’ விவாதங்கள் தீயாய்ப் பறக்கின்றன.