பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில், மொழிப் பிரச்சனை காரணமாக தபால் நிலைய ஊழியருக்கும் உள்ளூர் நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தபாலில் பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டிருந்த முகவரியை வாசிக்கத் தெரியாத தபால் ஊழியர், அதை மொழிபெயர்க்குமாறு அந்த நபரிடம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், “எனக்கு ஹிந்தி பேசத் தெரிந்தாலும், பஞ்சாபில் உள்ள அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உங்களுக்கு பஞ்சாபி தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறி ஊழியரைச் சாடினார்.

இந்த மோதலின் போது, தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகைகள் மற்றும் கவுண்டர் பெயர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும், உள்ளூர் மொழியான பஞ்சாபி புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நபர் குற்றம் சாட்டினார்.

மேலும் மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்திய மாநிலங்களைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாபிலும் மொழி குறித்த விவாதங்கள் முன்னுக்கு வந்துள்ளதை இச்சம்பவம் காட்டுகிறது. இறுதியில், சக ஊழியர்கள் தலையிட்டு அந்த நபரை சமாதானப்படுத்தியதால் நிலைமை கட்டுக்குள் வந்தது.