ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. “இதுதான் தேசத்தின் இளைஞர் சக்தியா?”  என்ற கேள்வியுடன் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோக்களில், அதிகப்படியான மது அருந்திய இளைஞர்களும் இளம் பெண்களும் சுயநினைவின்றி சாலைகளிலும், நடைபாதைகளிலும் மயங்கிக் கிடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பல இடங்களில் இளைஞர்கள் நடைபாதைகளிலேயே வாந்தி எடுத்து அசுத்தம் செய்திருப்பதையும், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களை அப்புறப்படுத்த சிரமப்படுவதையும் காண முடிகிறது. கொண்டாட்டங்கள் என்ற பெயரில் இளைஞர்கள் தங்கள் உடல்நலத்தையும், பொது ஒழுக்கத்தையும் கவனிக்காமல் இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொண்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“>

குருகிராமின் பிரபலமான மால் மற்றும் பப்கள் அமைந்துள்ள பகுதிகளில் இந்த அவலநிலை அரங்கேறியுள்ளது. புத்தாண்டு இரவின் ‘ஆஃப்டர் பார்ட்டி’ விபரீதங்களால், சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசலும், பாதுகாப்பு குழப்பங்களும் நிலவின. சமூக வலைதளவாசிகள் பலர் இந்த வீடியோக்களைக் கண்டு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

நவீன கலாச்சாரம் என்ற போர்வையில் கட்டுப்பாடற்ற மதுப் பழக்கம் இளைஞர்களைச் சீரழிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர, இது போன்ற கண்ணியமற்ற செயல்கள் எதிர்காலத் தலைமுறையினரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அமைகிறது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.