தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து மிகவும் தீர்க்கமான கருத்துகளை முன்வைத்தார். “இத்தனை கோடி, அத்தனை கோடி முதலீடு என்று வெறும் விளம்பரம் மட்டும் செய்யாமல், அரசு செய்துள்ள உண்மையான ஒப்பந்தங்கள் என்ன? அதன் மூலம் கிடைத்த வேலைவாய்ப்புகள் எத்தனை? என்பது குறித்த ‘வெள்ளை அறிக்கையை’ அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்று திமுக அரசை நோக்கிப் பாய்ந்தார். அரசின் புள்ளிவிவரங்களில் நிலவும் ஒளிவுமறைவுகளை அவர் கடுமையாகச் சாடினார்.
அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமில்லாமல், தனியார் துறையிலும் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை (Job Guarantee) டிவிகே அரசு உருவாக்கும் என்று அவர் உறுதியளித்தார். “நமது இளைஞர்களுக்குத் தேவையான சரியான வழிகளையும் வாய்ப்புகளையும் அரசு உருவாக்கித் தந்தாலே போதும், அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே செதுக்கிக் கொள்வார்கள்” என்று அவர் மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். இளைஞர்களின் எதிர்காலத்தை வெறும் விளம்பரப் பொருளாக மாற்றக் கூடாது என்று அவர் தஞ்சை மண்ணில் முழங்கினார்.
