செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பமானது வருங்காலத்தில் மின்சாரம் மற்றும் குடிநீரைப் போல ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறும் என்றும், அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் ‘மீட்டர்’ முறை அமலுக்கு வரும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் கணித்துள்ளார்.

மேலும் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போது ஏஐ சேவைகள் சந்தா முறையில் வழங்கப்பட்டாலும், எதிர்காலத்தில் பயனர்கள் எவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்களோ, அதற்கு ஏற்றாற்போல மட்டும் பணம் செலுத்தும் முறை உருவாகும் என்று குறிப்பிட்டார். இந்த மாற்றமானது ஏஐ தொழில்நுட்பத்தை வெறும் மென்பொருளாகப் பார்க்காமல், ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சாமானிய மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் தங்களுக்குத் தேவையான அளவு மட்டும் ஏஐ சேவையைப் பயன்படுத்திக் கொள்ள இந்த முறை வழிவகுக்கும். வரும் காலங்களில் மனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக ஏஐ மாறிவிடும் என்பதையே சாம் ஆல்ட்மேனின் இந்தக் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.