ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா எண்ணெய் தொழில் மண்டலத்தில், ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் பாகங்கள் விழுந்ததில் இந்தத் தீ பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபுஜைரா துறைமுகத்தில் எண்ணெய் ஏற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இப்பகுதி ஹார்முஸ் ஜலசந்தியைத் தவிர்த்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்வதால், இந்தத் தாக்குதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் தற்போது அமீரகத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை நோக்கித் திரும்பியுள்ளது. ஃபுஜைரா மட்டுமல்லாமல், துபாய் விமான நிலையத்தின் எரிபொருள் கிடங்கு மற்றும் அபுதாபியின் ஷா எரிவாயு வயல் ஆகியவையும் சமீபத்திய நாட்களில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரானிய புரட்சிகர காவற்படை இந்தத் தாக்குதல்களைத் தற்காப்பு நடவடிக்கை என நியாயப்படுத்தியுள்ள நிலையில், அமீரக அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்தத் தொடர் தாக்குதல்கள் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.