கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு நதிநீரைப் பகிரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரையே விவசாயம் மற்றும் மின் உற்பத்திக்கு முழுமையாக நம்பியிருந்த பாகிஸ்தான், இந்தியாவின் இந்த நதி நீர் நிறுத்த நடவடிக்கையால் தற்போது பொருளாதார ரீதியாகவும் உணவு ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா தண்ணீரைத் தங்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாகப் பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் குற்றம் சாட்டியுள்ளதுடன், செனாப் நதியில் இந்தியா புதிதாக இரண்டு நீர்மின் திட்டங்களை உருவாக்குவதற்கும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

தங்களுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் இந்தியா தன்னிச்சையாகச் செயல்படுவது சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயல் என்றும், இது தங்களின் 25 கோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி சாடியுள்ளார்.

மேலும், எல்லை கடந்த நீர்நிலைகளின் ஓட்டத்தை மாற்றியமைக்க முயலும் இந்தியாவின் முயற்சி “போர்நடவடிக்கையாக” கருதப்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது என்றும், இதில் எந்தவொரு சர்வதேச தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக விளக்கியுள்ளது.