டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த டெல்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியை தேபோஸ்மிதா பால் அவரது வீட்டிற்குள்ளேயே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று காலை பேராசிரியையின் வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது சகோதரி தேவரதி பாலுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவசரமாக நேரில் வந்து வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சகோதரி, தேபோஸ்மிதா பால் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கொல்லப்பட்ட பேராசிரியையின் தலையில் ஆழமான காயம் இருந்ததோடு, அவரது கை மணிக்கட்டு நரம்புகளும் துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்த நகைகளும், பணமும் அப்படியே இருப்பதால் இது கொள்ளைக்காக நடந்த கொலை இல்லை என்பதை உறுதி செய்துள்ள போலீசார், கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

டெல்லியில் பல்கலைக்கழக பெண் பேராசிரியை ஒருவரே வீட்டின் பூட்டை உடைத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.