தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தஞ்சை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வீட்டில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென கேஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் வீட்டில் இருந்த 6 பேரும் உடல் கருகி அலறியுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்த 6 பேரில், ஒருவர் இன்று சிகிச்சை பலன் தராமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் பலத்த தீக்காயங்களுடன் இருக்கும் மற்ற 5 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கேஸ் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நள்ளிரவில் நடந்த இந்த திடீர் சிலிண்டர் வெடிப்பு மற்றும் உயிரிழப்பு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.