அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ராணுவம் இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹார்முஸ் நீர்சந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்திற்குப் விதிக்கப்பட்ட தடை இன்னும் முழுமையாக அமலில் இருப்பதாகவும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீர்சந்தி திறக்கப்பட்டிருப்பதாக டிரம்ப் கூறிய பொய்யான தகவலை நம்பி, அந்தப் பாதையைக் கடக்க முயன்ற 3 வெளிநாட்டுக் கப்பல்களை ஈரான் ராணுவம் வழிமறித்துத் திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் வளைகுடா நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் எந்தவொரு கப்பலும் இந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எங்களுடைய முறையான அனுமதியின்றி இந்தப் பகுதிக்குள் நுழைய முயலும் கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும். வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் டிரம்ப் பரப்பும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கப்பல் நிறுவனங்கள் நம்ப வேண்டாம்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் நீர்சந்தி’ ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஈரானின் ஆதிக்கம் நிலவி வரும் சூழலில், டிரம்ப்பின் கருத்துகளால் பெரும் குழப்பம் நிலவியது. மேலும் தற்போது ஈரான் விடுத்துள்ள இந்த நேரடி எச்சரிக்கை, மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
