நேபாளத்தின் அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய மாற்றமாக, 35 வயதே ஆன பிரபல ராப் பாடகர் பாலேன் ஷா (Balen Shah), அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இன்று (மார்ச் 27, 2026) பதவியேற்றுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு, ஊழல் மற்றும் சமூக வலைதளத் தடைகளுக்கு எதிராக நேபாள இளைஞர்கள் (Gen Z) முன்னெடுத்த பிரம்மாண்ட போராட்டத்தால் பழைய ஆட்சி கவிழ்ந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாலேன் ஷாவின் ‘ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி’ (RSP) மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ​முன்னதாக காத்மாண்டு மாநகராட்சியின் மேயராக இருந்து அதிரடி காட்டிய பாலேன் ஷா, இப்போது நாட்டின் மிக உயரிய பதவியை அடைந்திருப்பது ஒட்டுமொத்த தெற்காசியாவையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பழைய அரசியல்வாதிகளின் கோட்டைகளைத் தகர்த்து, ஒரு கலைஞர் பிரதமராகப் பதவியேற்றிருப்பது, நேபாள இளைஞர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது. “இனிமே எல்லாம் எங்க கையில் தான்” என நேபாள இளைஞர்கள் உற்சாகத்தில் இருக்க, பாலேன் ஷாவின் இந்த ‘யங் அண்ட் போல்ட்’ தலைமை மீது உலக நாடுகளின் பார்வை விழுந்துள்ளது.