விண்வெளியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், சீனாவுக்குப் பதிலடி கொடுக்கவும் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி, நிலவின் மேற்பரப்பில் ஒரு நிரந்தர ராணுவ தளத்தை அமைக்க நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.
சுமார் 20 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்) செலவில் உருவாகவுள்ள இந்தத் திட்டம், விண்வெளிப் போட்டியில் அமெரிக்காவை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் நிலையம் அமைக்கத் திட்டமிட்ட நாசா, இப்போது தனது முடிவை மாற்றி நேரடியாக நிலவின் தரையிலேயே தளம் அமைக்க ஸ்கெட்ச் போட்டுள்ளது.
இதற்காக ரோபோடிக் லேண்டர்கள், ட்ரோன்கள் மற்றும் அணுசக்தி ஆற்றலைப் பயன்படுத்தவும் அமெரிக்கா தயாராகி வருகிறது. “1960-களில் அப்பல்லோ மிஷன் மூலம் சாதித்தது போல, இப்போதும் நிலவில் அமெரிக்காவின் கொடியை நிலை நாட்டுவோம்” என நாசா தரப்பில் உற்சாகமாகக் கூறப்பட்டுள்ளது.
2030-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் துடிக்கும் சீனாவுக்கு, அமெரிக்காவின் இந்த ‘மிலிட்டரி பேஸ்’ திட்டம் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த மெகா மிஷனில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் (Blue Origin) நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.
