டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக நேரம் கேட்டிருந்த நிலையில், அந்தச் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி பரபரப்பைக் கிளப்பின.

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

அதில், முதலமைச்சர் விஜய் – மத்திய அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பு எவ்விதத்திலும் ரத்து செய்யப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவுக்கு அவசர அலுவல் காரணமாக குஜராத் செல்ல வேண்டிய வேலை இருந்ததால், முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க இன்னும் தனியாக நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்படவும் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அமித் ஷா குஜராத் செல்வதால் நாளையும் இந்தச் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்றாலும், அடுத்தகட்டமாகச் சந்திப்பதற்கான மாற்று நேரம் விரைவில் இறுதி செய்யப்படும் என்பதால் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.