நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் நடந்த மதமாற்ற விவகாரம் ஓய்வதற்குள், தற்பொழுது மும்பையில் உள்ள ஒரு நாட்டின் முன்னணி வங்கியின் நரிமன் பாயிண்ட் கிளையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவரை, மதமாற்றக் கும்பல் திட்டமிட்டு மதமாற்றம் செய்ய முயன்றதாக அவரது கணவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், வங்கி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், மும்பை நரிமன் பாயிண்ட் கிளையில் வர்த்தக வாடிக்கையாளர் குழுவின் ஐபி (IB) பிரிவில் பணிபுரியும் தனது மனைவி, கடந்த சில மாதங்களாக திடீரென புர்கா அணிவது, இஸ்லாமிய மத நூல்களைப் படிப்பது மற்றும் நோன்பு நோற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடன் பணிபுரியும் சாஃபின் கோதல் என்ற சக ஊழியரின் தூண்டுதலால், அவரும் தங்களது 8 வயது மகளும் இஸ்லாம் மதத்திற்கு மாற விரும்புவதாகக் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.
இதனையடுத்து, தனது மனைவியை இந்தச் சூழலில் இருந்து மீட்க, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தனது சொந்த ஊருக்குக் கணவர் அழைத்துச் சென்றுள்ளார். மேலும், அவரது பணி மாறுதலுக்காக வங்கி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18, 2026 அன்று அதிகாலையில், மும்பையில் இருந்து உதய்பூர் வந்த சாஃபின் என்ற நபர், அந்தப் பெண்ணையும் அவரது மகளையும் கடத்திச் சென்றுவிட்டதாகக் கணவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக, கடந்த 2020-22 காலகட்டத்தில் மாலாடு கிளையில் வேலை பார்த்தபோது, ஆதிலா என்ற ஒப்பந்த ஊழியரால் தனது மனைவி பாலியல் மற்றும் பொருளாதார ரீதியாகச் சுரண்டப்பட்டதாகவும், இது ஒரு திட்டமிட்ட மதமாற்றக் கும்பலின் சதி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானின் உதய்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
