துபாயில் நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய ஒரு நபரை, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீட்புப்படையினர் மீட்டெடுத்த சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த நபர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரது துடிப்பு மற்றும் உணர்வு முற்றிலுமாக நின்ற நிலையில், தகவலறிந்த துபாய் அவசரக்கால மீட்புப்படையினர் வெறும் 7 முதல் 8 நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
A man in Dubai suffered a sudden heart attack, within moments responders acted, using an advanced CPR machine to bring him back to life. 🇦🇪⛑️ pic.twitter.com/lrE7PwNWba
— WB🇦🇪 ♕ (@S3eedWB) April 4, 2026
வழக்கமான முதலுதவி முறைகளுக்குப் பதிலாக, அதிநவீன தானியங்கி CPR கருவியை (Advanced CPR Machine) அவர்கள் பயன்படுத்தினர். இந்தக் கருவி மனிதர்கள் செய்வதை விட மிகத் துல்லியமாகவும், இடைவிடாமலும் இதயத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து, மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தைச் சீராகப் பாய்ச்சியது. சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு, அந்த நபரின் இதயத் துடிப்பு மீண்டும் திரும்பியது. “தொழில்நுட்பமும் மனித திறனும் இணைந்தால் எமனையும் வெல்லலாம்” என இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் துபாய் அரசைப் பாராட்டி வருகின்றனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
