பீகாரின் தர்பங்கா மாவட்டம், சகத்பூர் காவல் நிலைய எல்லையில் உள்ள மத்பூர் அரசு பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ராஜேஷ் குமார் தாக்கூர் கொலை செய்யப்பட்ட வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையை, ராஜேஷின் காதலியான ஆசிரியை ருக்மிணி குமாரியின் கணவர் அபிலாஷ் குமார் திட்டமிட்டு, 50 ஆயிரம் ரூபாய்க்கு ஆட்களை வைத்து செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜேஷ் தாக்கூரும், ருக்மிணி குமாரியும் மத்பூர் பள்ளியில் ஒன்றாகப் பணியாற்றி வந்துள்ளனர் . அங்கு அவர்களுக்கிடையே காதல் உறவு உருவாக இதற்க்கு ருக்மிணியின் கணவர் அபிலாஷ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் ருக்மிணி, ராஜேஷை திருமணம் செய்ய வலியுறுத்தியதால், அபிலாஷ் கோபமடைந்து, ராஜேஷை மிரட்டினார். அதுமட்டுமின்றி அவர் ராஜேஷை கொலை செய்ய திட்டமிட்டு, பணம் கொடுத்து ஆள் தயார் செய்திருந்தார். கொலை நடந்த நாளன்று, ராஜேஷின் பள்ளியில் கடைசி நாளாக இருந்தது, ஏனெனில் அவருக்கு இடமாற்றம் கிடைத்திருந்தது. அன்று, ருக்மிணி அவரை சந்திக்க விரும்பியதால், அபிலாஷ் கோபத்தில் ஆட்களை அனுப்பி ராஜேஷை கொலை செய்தார்.
இந்த வழக்கில், ராஜேஷின் சகோதரர் முகேஷ் தாக்கூர், ருக்மிணி மற்றும் அபிலாஷ் மீது சகத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கி, பஹேரி பகுதியில் உள்ள பவுர்வா கிராமத்தில் இருந்து இருவரையும் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
