தெலங்கானா மாநிலத்தில் பள்ளித் தலைமை ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு, அவரிடமிருந்து 2.5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில், அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயதுடைய இரு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன் ஆசிரியை தனது அத்தையிடம் போனில் பேசும்போது ‘பாபு’ என்று சொன்ன ஒரே ஒரு வார்த்தை தான் இந்த வழக்கின் முக்கியத் திருப்பமாக அமைந்து கொலையாளிகளைப் பிடித்துக் கொடுத்துள்ளது.

தெலங்கானா பகுதியில் சிறுவர்களையும் இளைஞர்களையும் ‘பாபு’ என்று அழைப்பது வழக்கம். அந்த ஆசிரியைத் தன் பள்ளி மாணவர்களை எப்போதுமே ‘பாபு’ என்றுதான் அழைப்பார் என்பதை உணர்ந்த காவல்துறையினர், விசாரணையை உடனடியாக அந்தப் பள்ளியை நோக்கியும் அங்கு படிக்கும் மாணவர்களை நோக்கியும் திருப்பினர். சுமார் 80 பேரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட அந்த இரு மாணவர்கள் தான் இந்த கொடூரத்தைச் செய்தனர் என்பது உறுதியானது.

அந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்த ஆசிரியை, அவர்களின் கெட்ட பழக்க வழக்கங்களைக் கண்டித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆசிரியை மீது ஆத்திரமடைந்த மாணவர்கள், அவரது வீட்டில் அதிகளவில் பணம் இருக்கும் என்று நினைத்துக் கொலையைத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக முன்கூட்டியே திட்டம் போட்டு கத்திகள், முகமூடிகள், கையுறைகள் மற்றும் சிவப்பு நிற ஹூடி ஆடை ஆகியவற்றை வாங்கித் தயார் செய்து வைத்துள்ளனர்.

சம்பவத்தன்று ஆசிரியை வீட்டில் தனியாக இருந்தபோது சமையலறை கதவு வழியாக உள்ளே புகுந்த மாணவர்கள், அவரை கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, படுக்கையறையில் இருந்த 2.5 லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். தப்பி ஓடும் வழியில் தாங்கள் பயன்படுத்திய கத்தி, முகமூடி மற்றும் ஹூடி ஆடையைப் புதரில் வீசி எறிந்துவிட்டுப் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு ஒன்றுமே தெரியாதது போல் நடந்து கொண்டுள்ளனர்.

மாணவர்களிடமிருந்து ரூ.1.54 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போன்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தன் மாணவர்களை நண்பனைப் போல நடத்தி, வழிகாட்டியாக இருந்த ஆசிரியை மீது ஒரு மாணவன் கொண்ட வன்மமும் பேராசையுமே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.