மும்பையைச் சேர்ந்த கௌரவ் லோண்டே என்ற இளைஞர், அனைவரும் வெறுக்கும் டிராபிக் ஜாம் (Traffic Jam) பிரச்சினையையே தனது பிசினஸ் ஐடியாவாக மாற்றி, சாதித்துக் காட்டியுள்ள உத்வேகமூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. கடந்த 2009-ல் ஒரு சாதாரண பிஸா டெலிவரி பாயாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கௌரவ், தினமும் அந்தேரியிலிருந்து தனது சொந்த ஊரான தானேவிற்கு 24 கி.மீ தூரத்தை பயங்கரமான டிராபிக்கில் கடக்க 3 மணிநேரம் வரை அவதிப்பட்டுள்ளார்.
அப்போது ஒருநாள் சிக்னலில் வேர்க்கடலை விற்பவரைப் பார்த்த கௌரவ், “நம்மள மாதிரி டிராபிக்கில் பசியோடு காத்துக்கிடப்பவர்களுக்கு ஸ்பாட்டிலேயே சூடாக வடாபாவ் கொடுத்தால் என்ன?” என்று யோசித்துள்ளார். அந்த ஒற்றை யோசனையில், கடந்த 2019-ல் தனது அம்மாவின் நிதியுதவியுடன் ‘தி டிராபிக் வடாபாவ்’ (The Traffic Vada Pav) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் மக்கள் வாங்கத் தயங்கியதால், தண்ணீர்ப் பாட்டில் மற்றும் டிஷ்யூ பேப்பருடன் நேர்த்தியாகப் பேக் செய்யப்பட்ட முதல் 50 வடாபாவ்களை இலவசமாகக் கொடுத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்.
வெறும் 20 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த வடாபாவ், மாலை 5 முதல் இரவு 10 மணி வரை சிக்னல்களில் ஆரஞ்சு நிற டி-ஷர்ட் அணிந்த கௌரவின் டீம் மூலம் மின்னல் வேகத்தில் டெலிவரி செய்யப்படுகிறது. வெறும் டெலிவரி பாயாக இருந்த கௌரவ், இன்று 8 பணியாளர்களுடன் தினமும் 800 வடாபாவ்களை விற்று, மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து அசத்தி வரும் இந்தச் சாதனைப் பயணம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
