உயிரோடு இருக்கும் சொந்தத் தந்தையையே தங்களது இறந்த கணவன் என்று பொய் சொல்லி, அரசு வழங்கும் கைம்பெண் (விதவை) உதவித்தொகையை ஒரு குடும்பமே ஆட்டைய போட்ட அதிரடி மோசடி உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பரேலி அருகே உள்ள ஆம்லா பகுதியைச் சேர்ந்த அச்சன் என்பவர் உயிரோடு இருக்கும்போதே, அவரது மனைவி அன்னி பேகம், மகள்கள் சுவாலீன் மற்றும் சன்னோ பீ ஆகிய மூவரும் அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இந்த விபரீத மோசடியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் மனைவி அன்னி பேகம் தனது கணவர் அச்சன் இறந்துவிட்டதாக ஒரு போலி இறப்புச் சான்றிதழைப் பெற்று பென்ஷன் வாங்கியுள்ளார்.

அதற்கடுத்து, அவரது மகள்களான சுவாலீன் மற்றும் சன்னோ பீ ஆகிய இருவரும் தங்களது சொந்தத் தந்தை அச்சனைத் தங்களது கணவன் என்று காட்டி, தனித்தனியாக மேலும் இரண்டு போலி இறப்புச் சான்றிதழ்களை வாங்கி, விதவை பென்ஷனுக்கு விண்ணப்பித்துப் பணத்தையும் சுருட்டியுள்ளனர். இப்படி ஒரே நபரின் பெயரில் மூன்று போலி இறப்புச் சான்றிதழ்களைத் தயாரித்து, வங்கிக் கணக்குகளில் ரூ.51,000 வரை பென்ஷன் பணத்தைப் பெற்றுள்ளனர்.

இந்தக் கொடூர மோசடி குறித்து ஹசீனா பேகம் என்பவர் முதலமைச்சரின் குறைதீர்ப்புப் பிரிவில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவினாஷ் சிங் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவட்டப் பருவகால அதிகாரி மோனிகா ராணா போலீசில் புகார் அளித்தார்.

புகார் அளிக்கப்பட்டு 8 மாதங்களாக தலைமறைவாக இருந்த அன்னி பேகம் மற்றும் அவரது இரண்டு மகள்களைப் போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாகக் காட்டி மோசடி செய்ய நகராட்சி மற்றும் வளர்ச்சித் துறை ஊழியர்கள் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்கு பின்னணியில் இருக்கும் பெரிய நெட்வொர்க்கையும், இதுவரை இவர்களால் ஏமாற்றப்பட்ட மற்ற நபர்கள் யார் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.