மான்செஸ்டரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 போட்டியில், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான வீரர் என்ற பெருமையைப் பெற்று, 37 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த மான்செஸ்டர் டி20 போட்டியில், இந்திய அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா, வைபவ்க்கு சர்வதேச போட்டிக்கான தொப்பியை வழங்கி கௌரவித்தார்.

இந்த வரலாற்று அறிமுகத்திற்குப் பிறகு, டாஸ் வென்று பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டித் தள்ளியதுடன், சஞ்சு சாம்சனை தூக்கிவிட்டு இவருக்கு ஏன் அணியில் இடம் கொடுத்தோம் என்பது குறித்தும் சுவாரசியமான விளக்கத்தை அளித்துள்ளார்.

வைபவ்வின் அசாத்திய திறமை குறித்துப் பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “கடந்த சில மாதங்களாகவே அவனது பேட்டிங்கை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விளையாட அவன் நூறு சதவீதம் தகுதியானவன். போட்டிக்கு முன்பாக நெட்ஸ் பயிற்சியின் போது, இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துகளையும் நாலாபுறமும் சிதறடித்து வெளுத்து வாங்கினான். அவனது பேட்டிங் ஸ்டைலைப் பார்த்து நாங்களே மிரண்டு போயிட்டோம். வைபவ்வின் மிகப்பெரிய பலமே, அவன் மைதானத்தில் எந்த ஒரு அழுத்தத்தையும்  எடுத்துக் கொள்வதில்லை.

மிகவும் நிதானமாக, சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறான்” என்று புகழாரம் சூட்டினார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன், கடந்த மூன்று போட்டிகளில் சொதப்பியதால் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு இந்த 15 வயது சிறுவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் பேசிய ஸ்ரேயாஸ், “தற்போது இந்திய அணியில் இடம் பிடிக்கக் கடுமையான போட்டி நிலவுகிறது. அணியில் இவ்வளவு திறமையான வீரர்கள் இருப்பது நல்லது தான்; இந்த அழுத்தம் தான் எங்களை இன்னும் சிறப்பாக விளையாடத் தூண்டுகிறது என்று கூறினார்.