ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தங்களது கட்சி எம்.எல்.ஏ-க்களை இழுக்க “குதிரை பேரத்தில்” ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் ஆளுநர் அர்லேகரிடம் அதிரடி புகார் அளித்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநரைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான குழுவினர், தவெக அரசு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இவர்களைத் தொடர்ந்து அதிமுக பிரதிநிதிகளும் தவெக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளது கோட்டையை அதிர வைத்துள்ளது.

​செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “வேப்பனஹள்ளி திமுக எம்.எல்.ஏ சீனிவாசனிடம் 50 கோடி ரூபாய் தருவதாகக் கூறி தவெக குதிரை பேரம் நடத்தியுள்ளது; அனிதா ராதாகிருஷ்ணனைப் பதவி விலகி தவெகவில் இணையச் சொல்லி 5 மணி நேரம் துன்புறுத்தி மிரட்டியுள்ளனர்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், எம்.எல்.ஏ ஆஸ்டினை ராஜினாமா செய்துவிட்டு வந்தால் அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டியுள்ளதாகவும், சிஎம் விஜய் முன்னிலையிலேயே ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி ஆகிய தனிநபர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்று அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் சாடினார். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் போவோம் என திமுக எச்சரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.