சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாநாட்டிற்காக சனிக்கிழமை மாலை தியான்ஜின் நகருக்கு சென்ற மோடிக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் நேரில் வரவேற்று கைகுலுக்கினார். இந்த சந்திப்பில், உலகத்தில் நிலவும் நிலைமை, வரிவிதிப்புகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து இருவரும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
“டிராகனும் யானையும் இணைய வேண்டும்” – ஜின்பிங் பார்வை
உலக நாடுகள் மாற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இந்நேரத்தில், சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய நாகரிகம் வாய்ந்த நாடுகளாகவும், அதிக மக்கள் தொகையுடன் உலகின் முக்கிய பகுதிகளாகவும் இருப்பதாக ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் சிறந்த அண்டை நாடுகளாகவும், நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். “டிராகனும், யானையும் ஒன்றாக இணைய வேண்டும்” என்ற அவர் பேச்சு, உலக சமாதானத்திற்கு முக்கியமான அழைப்பாக பார்க்கப்படுகிறது.
75 ஆண்டு ராஜதந்திர உறவுக்கான முன்னோக்கி பயணம்
இந்தியாவும் சீனாவும் கடந்த 75 ஆண்டுகளாக ராஜதந்திர உறவை பேணிவருவதை நினைவு கூர்ந்த ஜின்பிங், இந்த உறவை நீண்ட காலக் கண்ணோட்டத்தில் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்ற SCO மாநாட்டை நினைவுகூர்ந்த அவர், இம்முறை தியான்ஜினில் நடைபெற்ற சந்திப்பும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
