அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உள்நாட்டினருக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் எச்-1பி (H-1B) விசா விதிகளில் கடுமையான மாற்றங்களைக் கொண்டு வந்தது. வெளிநாட்டினர் வருகையால் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதாகக் கூறி, எச்-1பி விசாக்களுக்கு ஆண்டுக்கு 1,00,000 டாலர் வரை புதிய கட்டணத்தை டிரம்ப் அரசு விதித்தது.
இந்த அதிரடி முடிவால் அமெரிக்க ஐடி நிறுவனங்களில் பெருமளவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களும், விசா நேர்காணலுக்குக் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர். இந்தியாவின் ஐடி துறைக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்ட டிரம்பின் இந்த சர்வாதிகாரப் போக்குக்கு, தற்போது அமெரிக்க நீதிமன்றம் மிக பலத்த சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த விசா கட்டண உயர்வை எதிர்த்து 20 டெமாக்ரடிக் மாநிலங்களின் அட்டர்னி ஜெனரல்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த போஸ்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோ சோரோகின், எச்-1பி விசாக்கள் மீது விதிக்கப்பட்ட 1,00,000 டாலர் கட்டணம் சட்டவிரோதமானது என்று கூறி அதனை அதிரடியாக ரத்து செய்து ஜூன் 8 அன்று தீர்ப்பளித்தார்.
டிரம்ப் அரசுக்கு விழுந்த இந்த சட்ட ரீதியிலான அடி, அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் இந்திய மற்றும் சீன ஐடி ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துக்கொண்டு வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்குப் பணத்தைக் கொண்டு செல்வதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு அவரது விசா கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.
