அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போப் ஆண்டவர் லியோ தமக்கும் இடையே நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து, தன்னை இயேசு கிறிஸ்துவைப் போன்ற தெய்வீக ஆற்றல் கொண்டவராகச் சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு புகைப்படத்தைப் பகிர்ந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

மேலும் சமீபத்தில் ஈரான் போர் விவகாரத்தில் டிரம்பின் செயல்பாடுகளை போப் ஆண்டவர் விமர்சித்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “லியோ குற்றங்களுக்கு எதிராக மென்மையானவர் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மோசமானவர்” என்று டிரம்ப் கடுமையாகச் சாடினார்.

இந்த வார்த்தைப் போரின் உச்சகட்டமாக, டிரம்ப் ஒரு விவிலிய உடை அணிந்து, நோய்வாய்ப்பட்ட ஒருவரின் மீது கைகளை வைத்து ஆசிர்வதிப்பது போன்ற AI புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் கத்தோலிக்க திருச்சபை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் போப் ஆண்டவரை ஒரு அரசியல்வாதியாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய டிரம்ப், அவர் “தீவிர இடதுசாரிகளுக்கு” ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதே வேளையில், டிரம்பின் இந்த AI புகைப்படம் மத நம்பிக்கைகளை அவமதிப்பதாகக் கத்தோலிக்க அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் முதல் போப் ஆண்டவரான லியோ மற்றும் அதிபர் டிரம்ப் இடையேயான இந்த மோதல், உலக அரங்கில் மதம் மற்றும் அரசியலுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.