ஈரான் தற்போது தனது உயிர்வாழ்விற்காகப் போராடி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் அணுஆயுதத் திட்டங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைச் சிதைப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, மற்றும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எனப் பல்வேறு குழுக்களின் மூலம் இஸ்ரேலைச் சுற்றி வளைத்து நெரிக்க ஈரான் முயற்சி செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், இஸ்ரேலை அழிப்பதாக அச்சுறுத்திய ஈரானின் திட்டங்களை முறியடித்து, தற்போது அந்த நாட்டின் கழுத்தை இஸ்ரேல் நெரித்து வருவதாக நெதன்யாகு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானின் அச்சுறுத்தல்களை முறியடித்து, இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதி செய்வதில் தீவிரமாக இருப்பதை அவரது உரையாடல் வெளிப்படுத்துகிறது.