சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக அரசை வீழ்த்தும் நோக்கில் அதிமுக மற்றும் பாஜக அதிகாரப்பூர்வமாகக் கைகோர்த்துள்ளன. இதுதொடர்பான முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
பாஜக சார்பில் மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றனர். அதிமுக தரப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஸ் கோயல் ஆகியோர், “தமிழகத்தில் ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மக்கள் நலன் காக்கும் ஆட்சியை அமைக்கும்” என்று சூளுரைத்தனர்.
தொகுதிப் பங்கீடு மற்றும் உள்கட்சி விவகாரங்கள்: கசிந்த முக்கிய தகவல்கள்
இந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவு எட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அதிமுக 170 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்குத் தலா 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தேமுதிக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான பட்டியலை எடப்பாடி பழனிசாமி பியூஸ் கோயலிடம் வழங்கியதாகத் தெரிகிறது.
முன்னதாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும், அதற்கு மறுப்புத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களைக் கூட்டணியில் மட்டும் இணைத்துக்கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாமகவில் நிலவும் தந்தை-மகன் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதாக இபிஎஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
