பள்ளிகள் திறக்கும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன் வளாகத்தை ஆய்வு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயல் விடுமுறைக்கு பின் டிசம்பர் 11ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி வளாகத்தில் இருக்கும் உடைந்த பொருட்கள் கட்டட இடிப்பாடுகளை அகற்ற வேண்டும். மழை காரணமாக வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பூட்டி வைக்க வேண்டும். மழையால் சில வகுப்பறை பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பூட்டி மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

பள்ளி சுற்றுச்சுவரில் இருந்து 20 அடி தொலைவு வரை யாரும் செல்லாதபடி தடுப்புகள் அமைப்பது அவசியம்.
சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் யாரும் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும். பள்ளிகளின் சுற்றுச்சுவர்  மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கலாம், எனவே மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் அறைகளையும் தூய்மை படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தை முழுமையாக தூய்மை செய்து வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றிட வேண்டும். பள்ளி திறக்கும் நாள் அன்று வருகை புரியும் மாணவர்களுக்கு நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கி உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் முழுவதும் ஆய்வு செய்து கொடிய விஷ ஜந்துக்கள் இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும். விளையாட்டு திடலை மேடு பள்ளங்கள் இன்றி சமன்படுத்தி பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக மாற்ற வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டு பாட, புத்தகம் சீருடைகளை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகம் சீருடை வழங்க வேண்டும். பள்ளி கட்டடத்தின் மேற்கூரை சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் தேங்கா வண்ணம் உறுதிப்படுத்த வேண்டும். வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பள்ளியில் மின் இணைப்புகளை சரியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.