நாசிக் டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகப் பதிவான வழக்கில், கடந்த சில வாரங்களாகத் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி நிதா கான் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் கண்ணில் படாமல் இருக்க அடிக்கடி இடம் மாறி வந்த நிதாவை பிடிக்க, போலீஸார் சினிமா பாணியில் ஒரு திட்டத்தைத் தீட்டினர்.

காக்கிச் சட்டை, போலீஸ் ஜீப் என எதையும் பயன்படுத்தாமல், சாதாரண உடையில் பொதுமக்களோடு ஒருவராகக் கலந்து 20-க்கும் மேற்பட்ட போலீஸார் நரேகான் பகுதியில் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அவர் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி முற்றுகையிட்ட போலீஸார், அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே காய் நகர்த்தி அவரை மடக்கிப் பிடித்தனர்.

கைதின் போது நிதா கானுடன் அவரது குடும்பத்தினரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மலேசியா மற்றும் வெளிநாடுகளுடன் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தற்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.