மத்திய பிரதேச மாநிலத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து விடுதலையான நபர் ஒருவரை, அவர் சிறையில் இருந்தபோது அங்கேயே பணியாற்றிய சிறைத்துறை பெண் அதிகாரி காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தர்மேந்திர சிங் என்பவர் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தர்மேந்திர சிங் சிறையில் இருந்த சமயத்தில், அங்கு சிறை அதிகாரியாக ஃபிரோசா என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த தர்மேந்திர சிங், தனது நன்னடத்தை காரணமாக அண்மையில் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.

அவர் விடுதலையானதைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், இந்தத் திருமணத்திற்கு இருவீட்டாரின் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதாகக் கூறப்படுகிறது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, தர்மேந்திர சிங் மற்றும் ஃபிரோசா ஆகிய இருவரும் தற்போது முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். சிறை அதிகாரி ஒருவர் சிறையில் இருந்த கைதியை காதலித்து கரம் பிடித்துள்ள இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.