பீகார் மாநில அரசியலில் பெரும் திருப்பமாக, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் நீண்டகால முதல்வருமான நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக (MP) அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பீகாரில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. சாம்ராத் சௌத்ரி மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய முதலமைச்சர் பதவியேற்றதைத் தொடர்ந்து, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் மொத்தம் 32 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த அமைச்சரவையில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் இடம் பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.

முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார், இதுவரை தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். தற்போது தனது தந்தை மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலுக்குச் சென்றதைத் தொடர்ந்து, நிஷாந்த் குமார் அதிகாரப்பூர்வமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அவர் பீகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

“தந்தை நிதிஷ் குமார் மாநில அரசியலை விட்டு வெளியேறும் வரை நிழல் போல இருந்த நிஷாந்த் குமார், தற்போது மாநில அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளதன் மூலம் பீகார் அரசியலில் அடுத்த வாரிசு அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளது.