உத்திரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையிலான ஒரு வினோத திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு கடையில் விவசாய இயந்திரத்தை திருடிய திருடன், வெறும் இயந்திரத்தை மட்டும் எடுத்துச் செல்லாமல் கடைக்காரருக்கு ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான்.
அதில், “நண்பர்களாலும் வறுமையாலும் ஏற்பட்ட இக்கட்டான சூழலால் இந்த இயந்திரத்தை எடுக்கிறேன். இதன் விலை 90 ஆயிரம் ரூபாய் என எனக்குத் தெரியும். இதற்கு 10 சதவீத வட்டியுடன் சேர்த்து, மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நேர்மையாகத் திருப்பித் தந்துவிடுவேன்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளான்.
ஆனால், திருடிச் சென்ற இயந்திரம் தான் நினைத்த ஒன்று இல்லை எனத் தெரிந்தவுடன், அதை மீண்டும் கடையிலேயே கொண்டு வந்து வைக்க முயன்றபோது கிராம மக்களிடம் சிக்கிக்கொண்டான்.
அந்தத் திருடனையும் அவனது கூட்டாளியையும் கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடம் இருந்த டிராக்டர் மற்றும் இயந்திரத்தைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
“வட்டியுடன் பணம் தருகிறேன்” என நேர்மையாக லெட்டர் போட்ட திருடனின் செயல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
