காவல் நிலையத்திலேயே கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து, இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த மணீஷ் என்பவருக்கும், அவரது மனைவி பூஜாவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக இடையூறுகள் காணப்பட்டன. வரதட்சணை கோரிக்கை உள்ளிட்ட காரணங்களால் பூஜா பலமுறை தொல்லைக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரதட்சணை புகார் அளிக்க பூஜா தனது பெற்றோருடன் செக்டார் 51 காவல் நிலையம் சென்றார். இதை அறிந்த மணீஷ், தனது குடும்பத்தினருடன் அங்குத் சென்றார். இருபுறமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, தம்பதிகளுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் கிளம்பியது. இந்த வாக்குவாதம், கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். அங்கிருந்த போலீசாரால் கூட அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகு போலீசார் சண்டையை நிறுத்தி நிலைமையை சீரமைத்தனர்.
இதையடுத்து, காவல் நிலையத்திற்குள்ளேயே பொது அமைதியை பாதித்ததாக மணீஷ் மற்றும் பூஜா இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், வரதட்சணை புகாரை மையமாகக் கொண்டு கூடுதல் விசாரணையும் காவல் துறை மேற்கொண்டு வருகிறது.
