இங்கிலாந்தின் அபெரிஸ்ட்வித் நகரில் மது விருந்து ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, தனது தோழியுடன் டாக்ஸியில் ஏறிய அந்தப் பெண்ணிற்கு, தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கொடூரமான இரவு காத்திருக்கும் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.
30 வயதான டாக்ஸி ஓட்டுநர் டொமினிக் டால்டன், முதலில் அந்தப் பெண்ணின் தோழியை இறக்கிவிட்டுள்ளார். பின்னர், அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பயன்படுத்தி, பயணக் கணக்கு பதிவாகாமல் இருக்க டாக்ஸி மீட்டரை அணைத்துவிட்டு அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டிற்கு வந்தும் அந்தப் பெண் எழாததால், அவருக்கு உதவுவது போல நடித்து படுக்கையறை வரை தூக்கிச் சென்ற ஓட்டுநர் டால்டன், அங்கு தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார். அந்தப் பெண் அரை மயக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தபோது, தன்னை நம்பி ஏறிய பயணியை அந்த ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்ததைக் கண்டு உறைந்து போனார்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிய அந்தப் பெண், சமையலறை கத்தியை எடுத்து ஓட்டுநரை மிரட்டியுள்ளார். அங்கிருந்து தப்பித்து வெறுங்காலுடன் தெருவிற்கு ஓடி வந்த அவர், ஆவேசத்துடன் அந்த டாக்ஸியின் டயர்களைக் கத்தியால் அறுத்து எறிந்துள்ளார்.
இதனால் டாக்ஸியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிய டால்டன், போலீசாரிடம் சிக்காமல் இருக்க இணையதளத்தில் “பாலியல் வன்கொடுமை புகாரிலிருந்து தப்பிப்பது எப்படி?” எனப் பலமுறை தேடியுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் துணிச்சலான போராட்டத்தாலும், காவல்துறையினரின் தீவிர விசாரணையாலும் டால்டனின் பொய்கள் அம்பலமானது.
பிப்ரவரி 18 அன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தொழிலில் இருந்துகொண்டு இத்தகைய கொடூரத்தைச் செய்த டால்டனுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டது.
