ஓர் அரசியல் கட்சி என்பது தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் மட்டுமே கட்டமைக்கப்பட முடியும் என்றும், சினிமா பாணி பவுன்சர் கலாசாரத்தைக் கொண்டு வந்து சொந்தக் கட்சியினரையே அச்சுறுத்துவது அப்பட்டமான ரவுடித்தனம் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொன்னேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவின்போது, அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை பவுன்சர்கள் என்ற பெயரில் சிலர் அடாவடித்தனம் செய்து, தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்போம் என்று மார்தட்டிய தவெக, தற்போது தன் சொந்தத் தொண்டர்களுக்கே பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது வேடிக்கையாக உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். ஜனநாயக வழியில் அரசியல் செய்வதாகக் கூறிக்கொள்ளும் தவெக தலைவர் விஜய், இனியாவது தனது சொந்தக் கட்சியினரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பதிவின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.